Monday 3 January 2011

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 24, 25-1938 திறனாய்வு - தொடர்ச்சி



இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறை பெற்றிருக்கிற கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, கல்வி உயர்நிலை, சமுதாய அந்தஸ்து எல்லாம் பெரியார் - பெரியாரின் இயக்கம் போட்ட பிச்சை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
பெரியார் பெற்றுத்தந்த சுகவாழ்வு- அவர் அதற்காக பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழனின் இல்லத்திலும் அவர் எந்த இயக்கத்தில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - ஆனால் பெரியார் படம் - பெரியார் நினைவு இருக்க வேண்டும்.
குடிஅரசு 13.3.1938இல் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியான இதை ஊன்றிப் படித்து எவ்வளவு துயரம், துன்பம், சிரமம் தாங்கிப் பெரியார் என்னும் மாமனிதர் தன் சுகதுக்கங்களைத் துறந்து இதனைச் செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமான இதனை மனதில் ஒவ்வொருவரும் நிலைநிறுத்த வேண்டும்.
காங்கிரசின் பொறுமையும், அகிம்சா தர்மமும் யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கிரஸ் சரித்திரத்தில் அகிம்சை என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்தச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குத் திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அகிம்சை தர்மத்தைக் காட்டி வந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக் காட்டுமா என்று கேட்டுகின்றோம்.
காங்கிரஸ் காலித்தனம் செய்யாத கூட்டமுண்டா?
இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4000 பொதுக் கூட்டங்கள் கூடி 500 முதல் 20,000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கிரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத செய்ய முயற்சித்துப் பார்க்காத, செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழிமுட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்குக் கள்ளு வாங்கிக் கொடுத்துக் கூப்பாடு போடச் செய்ததும், சிறுபிள்ளைகளை விட்டு ஜே போடச் செய்து கலவரம் செய்வதும், அனாவ சியமான கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும், சுயமரியாதைக் கூட்டம் நடக்கு மிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டுக் கூப்பாடு போடுவதும், பக்கத்தில் தப்பட்டை மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது சமீபத்தில் நின்றுகொண்டு ஜனங்களைக் கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்து திருப்பி அனுப்புவதும், துண்டு நோட்டீசு களை கொண்டு வந்து கூட்டங்களில் விநியோகித்து கலாட்டா செய்வதுமான பல அற்பத்தனமான காரியங்களாகும்.
எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணியாத கேவல செய்கைகளும் செய்து தான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த 3000, 4000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக் கப்பட்டு விட்டதென்றோ பேச்சுக்கள் முடிந்து தலைவர் முடிவுரை நடந்து தலை வருக்கும் கூட்டத்துக்கும் வந்தனோப சாரம் சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ருஜு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கிறோம்.
முன்சொன்னபடி சுயமரியாதைக் கூட் டங்களில் எவ்வளவு காலித்தனமும் கலாட் டாவும் நடந்திருந்தாலும் சுயமரியாதைக்காரர் கள் ஒரு ஆளையாவது ஒரு சிறு பையனையாவது அடித்தார்கள். கையால் தொட்டுத் தள்ளினார்கள் என்றாவது நிரூ பித்து விட முடியாது. ஏனெனில், தோழர் ஈ.வெ.ரா. இருக்கும் கூட்டங்களில் எல்லாம் தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும் சமாளித்து சுயமரியாதைக் காரர்களையே கண்டிப்பதின் மூலம் எதிரிகள் வெட்கப்படும்படிச் செய்து அடக்கி காரியம் முடித்து வரப்பட்டிருக்கிறது.
உதாரணமாக ஒரு மாத காலத்தில் 34 இடங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கிரஸ் பத்திரிகைகளிலேயே வந்திருக்கின்றது. காஞ் சிபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அண்ணாத் துரை ஆகியவர்கள் பேசும்போது காங்கிரஸ் காரர்கள் காலித்தனம் செய்தார்கள்.
தஞ்சாவூர் மாநாட்டின்போதும் போடப் பட்ட பொதுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும் போது காங்கிரஸ்காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா. சுயமரியாதைக் காரர்களைக் கோபித்துக் கொண்டதால் காங்கிரஸ் காலிகள் தங்கள் இஷ்டம் போல் கூப்பாடு போட்டு அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள் - அன்று அது கார ணமாய் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்தது.
நீடாமங்கலம் நிகழ்ச்சி
தமிழகத்தில் சிலர் திராவிட இயக்கம் குறிப்பாகத் திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? தந்தை பெரியார் பெரிதாக என்ன செய்து விட்டார் சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு என்று அறியாமை யாலோ அல்லது தெரிந்தோ கேட்பது வழக்கம். அவர்களுக்கு விடையளிக்கும் நிகழ்ச்சியாக அமைவது நீடாமங்கலம் நிகழ்ச்சியாகும்.
நீடாமங்கலம் காங்கிரஸ் அரசியல் மாநாட் டில் ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை ஆதாரபூர்வமாக ருஜுக்களு டன் கொடுமைக்கு ஆளானவர்களின் அறிக் கைகளோடு குடிஅரசு எடுத்துக்காட்டியது உண்மையிலேயே ஒரு பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அத்தோடு அய்யாவின் மொழியில் கூறுவதானால் காங்கிரசின் உடுக்கைகளுக்குக் கிலி பிடித்து விட்டது. காங்கிரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும் இவர்களுக்குத் தாளம் போடும் தன்னலக் காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டுச் சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது.
நீடாமங்கலம் கொடுமைக்கு ஆளான வரின் குரலில் சொன்னால் உண்மையில் இன்றும் கேட்பவர்களின் நெஞ்சம் பதை பதைக்கும். நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர் களைத் துன்புறுத்தி மொட்டையடித்துச் சாணி ஊற்றிக் கொடுமை செய்துள்ளனர்.
அதில் பாதிக்கப்பட்ட தோழர் தேவ சகாயம் 26.1.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை 30.1.1938இல் வெளியானது.
ஆண்டமாரே! நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட் டிற்குப் போகும்போது எங்களையும் கூப்பிட் டார்கள். நாங்களும் சாப்பாட்டிற்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலைமயிரைப் பிடித்து இழுத்து ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள். அடி பொறுக்க மாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக்கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிபட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும்போது கூட்டத் தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டு வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன் னார். நான் போனேன். அப்போது அய்யர் அவனைச் சும்மா கொண்டு வருகிறாயா? அடிபடவாவை என்று சொன்னார். தலை யாரி மாணிக்கம் தடிக்கம்பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்க மாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார். நாட்டாமைக்காரர் அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர்களை அய்யர் கூப்பிட்டு இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்துச் சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்தப் பிரகாரம் பாரியாரிமகன் ஆறுமுகம் மொட்டை அடித் தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தி னார். பிறகு நாங்கள் தலையை முழுகிவிட்டு வீட்டிற்குப் போய்விட்டோம்.
குடிஅரசு ஏட்டில் மட்டுமல்லாது, விடு தலை ஏட்டிலும் இச்செய்தி வெளியாயிற்று. ஆனால் அதைக் காங்கிரஸ் தோழர்கள் அடியோடு மறுத்துக் கூறியதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்டத் தப்பான வழிகளில் முயற்சித்தனர். இச்செய்தி வெளியான 15 நாள் கழித்து, அடிபட்டு- உதைபட்டு மொட்டை அடித்துச் சாணி அபிடேகம் செய் யப்பட்ட ஆதிதிராவிடர் பலரைப் பிடித்துக் கொண்டு வந்தும் மிரட்டி, அம்மாதிரியான செயல் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு, அதில் அவர்களது கையெ ழுத்து வாங்கி அதில் சேராதவர்கள் புகைப் படத்தையும், வாக்குமூலத்தையும் பத்திரிகை களில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்த்த துடன் விடுதலை பத்திரிகை பொய் யான சேதியை வெளிப்படுத்திற்று என்று தலைப்புக் கொடுத்து தினமணி முதலிய பத்திரி கைகள் பிரச்சாரம் செய்தன.
எனவே உள்ளத்தை உருக்கும் வகையில் குடிஅரசு இதைக் கண்டித்துத் தலையங்கம் எழுதியது. அதில் உள்ள இக்குறிப்பிடத்தக்க வரிகள் அன்றைய நாளில் தாழ்த்தப்பட்டவர் இருந்த நிலையைத் தெற்றென விளக்கும்.
ஆதிதிராவிடர்கள் நிலைமை பழைய கால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்குச் சொந்தமோ, அதுபோலவே அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்குச் சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதி திராவிட மக்கள் அடிமைகளாக இருந்து பூமி கைமாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம்.
(தொடரும்)

Sunday 2 January 2011

பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் திறனாய்வு


தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசைப்படி தொகுத்து வருங்கால சமுதாயம் பயன்படக்கூடிய வகையில் வெளியிடுகின்ற அரும்பணியினை அருமை இளவல் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டு பெரியார் களஞ்சியம் - குடிஅரசு என்ற தலைப்பில் முதல் தொகுதி வெளிவரவிருப்பதும், அதனைத் தொடர்ந்து ஏனைய தொகுதிகள் வரவிருப்பதும், பெரிதும் வரவேற்றுப் பாராட்டத்தக்கதாகும் என்று 2009இல் பெரியார் களஞ்சியம் வெளியீட்டிற்குத்  தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழங்கிய அணிந்துரையில் குறிப்பிட்ட வாழ்த்துக்கேற்ப, அப்பணி தொடர்ந்து, தொய்வில்லாமல், தடைகளின்றி நடைபெற்று வருவதன் சான்றுகள்தான் குடிஅரசு தொகுதிகள் 24, 25 - 1938 அய்யாவின் நினைவு நாளில் 24.12.2010இல் வெளிவருவது என்பதாகும்.
இதுபோன்ற பணி உலகிலேயே எந்த நாட்டிலும் எவரும் செய்யாத பணி - எந்தத் தலைவர் வரலாற்றிலும் காணக் கிடைக்காத பணி - சொல்லப்போனால் காந்தியடிகளுக்கு வேண்டுமானால் ஓரளவு குறிப்பிடலாம்.  "Collected works of Mahatma Gandhi" என்று வெளிவந்துள்ளது.
இப்பணியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக வெளியிட்டுவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பாராட்டவும் போற்றிப் புகழவும் வேண்டும். போற்றுவதோடு, வாழ்த்துவதோடு நின்று விடாமல் ஒவ்வொருவர் இல்லத்திலும் அகராதி நூல் இருப்பது போல், கலைக்களஞ்சியங்கள் போல் இடம் பெறவேண்டும்.
ஏனென்றால் பெரியாரின் சிந்தனைச் சிதறல்கள், மேடைகளில் எடுத்து வைத்த மேன்மையான கருத்து மணிகளைக் காற்றில் கலந்து போய் விடாமல் அறுவடை செய்து சேர்த்து வைத்த கருத்துக் களஞ்சியம், கருத்துக் குதிர்கள்தாம் குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, "Revolt" முதலிய பெரியார் நடத்திய ஏடுகள் ஆகும்.
நூலின் சிறப்பு
தலைவர் கலைஞர் அவர்களே தம் அணிந்துரையில் சுட்டிக் காட்டியதைப்போல் இந்த நூலின் சிறப்பு அம்சமாகத் தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களும் அவர் கலந்து கொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளும் எந்தத் தேதியில் என்னென்ன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதற்கான விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் எல்லாம் வருங்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் - திராவிட இயக்கத்தைச் சில கோணல் புத்தியாளர்கள், குறுக்குச் சிந்தனையாளர்கள் தவறாகப் பிழையாகக் காட்டுகின்ற நேரத்தில் - முறையாகவும் சரியாகவும் தெரிந்து கொள்ளவும் பெரிதும் உதவிடும் என்பதில் அய்யமில்லை.
தொடரும் பணி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு தொகுதிகள் வெளியிடும் பணி ஏதோ அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்திடும் பணி அல்ல என்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் - தொடரும் பணி. இன்று குடிஅரசு வெளிவருவது - நாளை விடுதலையாக மலரும்.
இப்பதிப்புகள் வெளிவரும் நேரத்தில் புரட்சிக்கவிஞர் பாடிய சித்திரச் சோலைகளே உம்மைத் திருத்த இப்பாரினிலே எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ என்று சோலைகளைப் பார்த்துப் பாடிய பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
இந்தத் தொகுப்பினைச் செப்பமுற வெளிக்கொணரக் கடும் உழைப்பினை நல்கி வரும் பெரியவர் மு.நீ.சிவராசன் முதலாக, அவர் தலைமையிலே தேனீயை விடவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இளைஞர்கள், இளம் பெண்கள், கணினி வடிவமைத்தவர்கள், வடிவமைப்புச் செய்தவர்கள் மா.விஜயன், தஞ்சை ம.லெனின், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அச்சிட்டவர்கள் அதை வெளிக்கொணரப் பாடுபட்ட சைதை மதியழகன் விடுதலை நிருவாகிகள் - ப.சீதாராமன், க.சரவணன் என்று முகம் தெரிந்த - முகம் தெரியாத - பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அந்தப் பல உழைப்பாளிகளை, இந்த வேளையில் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களின் உழைப்பைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும். வாய் திறந்து பாராட்ட வேண்டும். அவர்கள் இயக்கத்தினுள் இயக்கமாகப் பணியாற்றி வருகிறார்கள்.
ஆசிரியரின் அயராத உழைப்பு
மெய்ப்புப் படிகளைக் கட்டி மூட்டை, மூட்டையாக ஆசிரியர் சிங்கப்பூர் சென்றாலும், திருச்சி சென்றாலும், அல்லது வேறு சுற்றுப்பயணம் சென்றாலும் உடன் தவறாது எடுத்துச் சென்று இந்த வயதிலும் சுறுசுறுப்பாகப் படித்துத் திருத்தங்கள், கருத்துகளை எடுத்துக்கூறி உரிய நேரத்தில் வெளியிட்டு வரும் பாங்கு அவ்வப்போது உடனிருந்து பார்த்தவர்களே என்னைவிட நன்கு அறிவர்.
ஆராய்ச்சியாளர் என்ற வகையில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை முதன் முதலில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றவன் என்ற முறையில் குடிஅரசுக் கட்டுரைகளை 1970-களில் அன்றைய சின்னஞ்சிறு நூலகமாக இருந்து இன்று பெரிய சிறந்த ஆராய்ச்சி நூலகமாக வளர்ந்துள்ள பெரியார் மணியம்மை நூலகத்திலும், லிங்கிச் செட்டி தெருவில் இருந்த மறைமலை அடிகள் நூலகத்திலும் சுவைத்தவன் என்ற முறையில் இத்தொகுப்பு கள் கரும்பாகவும், வெல்லக் கட்டியாகவும் இனிக்கின்றன.
கரும்பென்றால் கூட அடிக்கரும்பு, நடுக்கரும்பு வரைதான் தித்திக்கும். ஆனால், இக்குடிஅரசு தொகுப்புகளோ முழுவதும் தித்திக்கும் ஒட்டுக் கரும்பு என்பேன்.
1938இன் முதன்மை நிலை
குடிஅரசு வெளிவந்த ஒவ்வொரு காலகட்டமும் தந்தை பெரியாரின் வாழ்வில் முதன்மையான கட்டம்தான். அது முதலில் வெளிவந்த ஆண்டான 1925 ஆக இருந்தாலும் சரி, சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1926ஆம் ஆண்டாயினும் சரி - இப்போது தொகுதிகள் 24, 25 வெளிவந்த 1938 ஆண்டா யினும் சரி முதன்மையான கட்டங்கள்தாம். எனினும் சுய மரியாதை இயக்க வரலாற்றில் மிக முக்கியமான கட்டம் இது.
இதுவரை சுயமரியாதை இயக்கத்தவராக விளங்கிய கல்லடியும், சொல்லடியும் ஏச்சுகளும், இழிப்பும், பழிப்பும் பெற்ற தலைவர் பெரியார் இந்தி எதிர்ப்புத் தலைமைப் பொறுப்பு ஏற்றுத் தமிழன் தொடுத்த முதல் போரினைத் தலைமையேற்று - அதன்பின் சிறை புகுந்து, திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சிக்குத் தலைமைப் பொறுப்பு சுமத்தப்பட்டு ஏற்றுக்கொண்ட காலம் இது.
புல் முளைத்துப் போய்விட்டது தேர்தல் தோல்வியால் என்று சொல்லப்பட்ட நீதிக்கட்சி, அய்யாவின் தலைமையில் புதுவாழ்வு பெற்ற காலம். குடிஅரசு ஒவ்வொரு தொகுப்பையும் அதில் காணப்படும் கல்லூரி காணாக் காளையான - அந்த முதுபெரும் கிழவரின் சொற்பெருக்கு - எழுத்துப் பெட்டகம் ஒவ்வொன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது - அவரை விண்ணுயர மட்டுமல்ல அதற்கப்பாலும் கொண்டு செல்ல வைக்கிறது. இத்தொகுப்புகளில் உள்ள விஷயங்களை, செய்திகளைத் திறனாய்வு செய்வது என்று ஒருவர் இறங்கினால் அது இத்தொகுப்புகள் போல் இன்னும் இரண்டு தொகுப்புகளாக முடியும். எனவே குறிப்பிடத்தக்க, மிக, மிக முதன்மையான இரண்டொரு நிகழ்ச்சிகளை மட்டும் தொட்டுக் காட்டி, நூலைப் படிப்பவர்களை உட்புகச் சொல்கிறேன்.
காங்கிரசின் இன்னொரு முகம்
காங்கிரஸ் என்றால் ஏதோ  விடுதலைக்குப் பாடுபட்ட இயக்கம் என்று மட்டும்தான் எண்ணிக் கொண்டிருப்பவர் களுக்கு அக்காலக் காங்கிரஸ் பேரியக்கத்தின் இன்னொரு முகம் இத்தொகுப்பைப் படித்தால் தெரியும் என்று கூறுவதால் காங்கிரசு அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. ஏனென் றால் கடைசி வரை கதர் உடுத்திய என் தந்தை, காங்கிரசில் பல்லாண்டுகளாகத் தலைமைப் பொறுப்பை ஏற்ற குடும்பத்தைச் சேர்ந்த சுயமரியாதைக்காரன் - தந்தை பெரியார் என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசிலிருந்து கொண்டிருந் தாரோ, என்ன நோக்கத்திற்காகக் காங்கிரசைவிட்டு விலகி னாரோ, என்ன நோக்கத்திற்காகச் சுயமரியாதை இயக்கம் தொடங்கினாரோ அந்தக் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றி இருப்பவன்.
காலித்தனம்
தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறித் தன்மதிப்பு இயக்கம் கண்ட பிறகு காங்கிரசு இயக்கத்தவர் மட்டுமல்ல, காங்கிரசுப் பத்திரிகைகளும் காலித்தனத்திற்கு ஆதரவாக இருந்திருப்பதைக் காண்கிறோம்.
காங்கிரஸ் ராஜ்ஜியமும் கவர்னர் கடமையும் எனும் முதல் கட்டுரையில் தொடக்கமே இப்படித்தான் - எச்சரிக்கை என்பதோடு தொடங்குகிறது.
காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சிகரமானதுமான காரியங்களைப் பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.
காங்கிரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக்கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ்காரர்களின் சுயராஜ்ஜியமாகவும் பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக் குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய்க் காங்கிரஸ்காரர்களின் காலித் தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு, சந்தர்ப்பத்திலும் பொது ஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி, பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுக்கும் வேண்டுகோள் செய்துகொண்டே வந்திருக்கிறோம்.
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றைக் காங்கிரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்திக் காலிகளுக்கு உற்சாகமூட்டி மறுபடியும் மேற்கொண்டும் மற்ற இடங்களி லும் காலித்தனம் செய்ய தூண்டியே வந்திருக்கின்றன.
காங்கிரஸ் காலிகளால் கூட்டங்களில் மிக்க இழிவானதும், கோபமூட்டத்தக்கதுமான வார்த்தைகளையும் வேண்டுமென்றே தூஷணையான விஷயங்களையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அள்ளி இறைப்பதும், கையில் கொடுப்பதும், தபாலில் அனுப்புவதுமான அயோக் கியத் தனங்கள் ஏற்பட்டு வேண்டுமென்றே மக்களை வம்புக்கு இழுப்பது போன்ற காரியங்கள் நடந்த வண்ண மாகவே இருந்திருக்கின்றன.
கூட்டங்களை எப்படியாவது கலைத்து விடுவதிலேயே காலிகள் கவலை வைத்து எவ்வளவு பொறுப்புடனும் பயத்துடனும் நடந்து கொள்ளும் கூட்டங்களிலும் காங்கிரஸ் காலிகள் சிலர் கூடிக் கொண்டு ஜே போட்டு கலகம் செய்வதும் சிறு பிள்ளை களைத் தூண்டிவிட்டுத் தொல்லை விளைவிப்பதுமான காரியம் செய்தே வந்திருக்கிறார்கள். இவ்வளவையும் பொறுமை யுடன் சமாளித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
அன்றைய காங்கிரஸ்காரர்கள் ஏதோ காந்திய நெறி - வன்முறையற்ற அகிம்சா நெறி வழி நடந்து, வந்தே மாதரம் கூறிக் கைராட்டையில் நூற்று, ஈசுவர அல்லா தேரேநாம் வைஷ்ணவ ஜன்தோ என்று பாடிக் கொண்டிருந்தவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. பெரியார் கூட்டங்களில் மட்டுமல்ல - மதுரையில் பேசிய சர்.குமாரசாமி ரெட்டியார் கூட்டத்தில் சர்.பி.டி. ராஜர் அமைச்சராய் இருக்கும் போதே சேலம், கோயம்புத்தூர் கூட்டங்களில், திருச்சி, சேலத்தில் தோழர்கள் சித்தையன், நடேசன் முதலியவர்களை மேடைக்கு அழைத்து நையப்புடைத்த சம்பவங்கள், திருச்சி தமிழர் மாநாட்டில் நடந்த காலித்தன நிகழ்ச்சிகள் என்று பெரியார் பட்டியல் போடுகிறார்.
காந்தியவாதிகள் கல்லெறிந்த போது சுயமரியாதைக் காரர்களை எதிர்த்துத் தாக்க, வன்முறையில் இறங்கப் பெரியார் ஒருபோதும் அனுமதிக்காத உண்மையான அகிம்சாவாதியாக இருந்திருக்கிறார். அப்படிப் பட்ட உணர்வு கொண்டவர்களை அழைத்துக் கண்டித்து முன்னே நிற்காதே என்று விரட்டிய உத்தமத் தலைவராக விளங்கியிருக்கிறார் என்பதற்கு இத்தொகுப்புகள் சான்று மட்டுமல்லாது - எவ்வளவு உயர்ந்த பண்பாளர் பெரியார் என்று காட்டுவதைப் பெரியாரின் இந்த நினைவு நாளில் இந்தத் திறனாய்வு வழி பதிவு செய்தல் வேண்டும்.
(24.12.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள்  கருத்தரங்கில் - எழுத்துரை

Sunday 12 December 2010

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த ஆரியர்கள் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை

கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை.
காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர்.
செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழரின் மரபுப் பட்டியல் வாசிக்கிறது. விசயாலயச் சோழன் முதல் இராசேந்திரன் வரையிலான வாரிசுமுறையை வரிசைப்படுத்துகிறது, வகைப்படுத்துகிறது.
ஆரியத்தை வேரூன்றச் செய்த சோழ மரபிற்குக் குலக் கொழுந்தைக் கொலை செய்து பரிசளித்தது ஆரியம். பிரம்மதேயம் என்று பல்லவர் வழியில் பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்கிய சோழர்களுக்குப் பரிசாகப் பார்ப்பனியம் அளித்த கொடைதான் இளவரசர் ஆதித்த கரிகாலன் படுகொலை.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்க காலத்துக்குப் பின் சோழர் மரபைத் தொடங்கி வைத்தவன் விசயாலயச் சோழன். இவன் மார்பில் எண்ணற்ற விழுப்புண்கள் இவர்தம் வீரத்திற்குப் பதக்கங்களாகத் திகழ்வதாக சீறும் செவிற்றிரு மார்பு தொண்ணூறும்
ஆறும் படுத்தழும்பின் ஆழத்தோன் என்று குலோத்துங்க சோழனுலா கூறும். விசயாலயனுக்குப்பின் அவருடைய மகன் இராசகேசரி முதலாம் ஆதித்த கரிகாலன் பட்டத்திற்கு வந்தார். இவருடைய மறைவிற்குப் பின் இரு புதல்வர்களான முதற் பராந்தகன், கன்னர தேவனில், முதற் பராந்தகன் ஆட்சிக்கு வந்தார். மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி இவரைக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடும், இவ்வாறு:
ஈழ முத்தமிழ்க் கூடலூர் சிதைத்து இகழ் கடந்ததோர் இசை பரந்தும்
முதலாம் பராந்தகனின் மகன் இளவரசன் தக்கோலப் போரில் இறந்தான். எனவே, பராந்தகனின் இரண்டாவது மகன் கண்டராதித்தன் அரியணை ஏறினான். இவர் மனைவியே செம்பியன் மாதேவி. கண்டராதித்தனின் மகன் உத்தமசோழன். உத்தம சோழன் கண்டராதித்தன் இறந்தபோது இள வயதினன் ஆகையால் தம்பி அரிஞ்சயன்ஸ் அரியணை ஏறி ஆத்தூரில் நடந்த போரில் இறந்து விட்டான். இந்த அரிஞ்சயனுக்குப் பிறந்த சுந்தர சோழனின் மூத்த மகன் இரண்டாம் ஆதித்த கரிகாலன். இவருடைய தம்பிதான் அருள்மொழி என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜன்.
ராஜராஜனின் அண்ணன் இரண்டாம் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து கொலை செய்யப்படாமல் ஆட்சியில் இருந்திருந்தால் சோழர் வரலாற்றில் ராஜராஜன் என்ற பெயரே இடம் பெறாமல் போயிருக்கும்.
இந்தக் கரிகாலனின் படுகொலையைச் செய்தவர்கள் யார் எனும் வரலாற்று உண்மை மறைக்கப் பெற்றிருக்கிறது.
அந்தச் செய்திகளை  மறைக்கப்பட்டவற்றை அறியும் முன்னர் அடுத்து நிகழ்வுற்றவற்றை முன்னர்க் காண்போம்.
மகன் படுகொலையானதால் மன்னன் சுந்தரசோழன் நிலை குலைந்தார். காஞ்சியிலிருந்த பொன்னாலான அரண்மனை மாளிகையில் உயிர் துறந்தமையால், பொன் மாளிகை துஞ்சிய தேவர் ஆனார்
இராசராசசோழன் தந்தை இறந்ததும், தனயன் இல்லாது படுகொலையானதுமான சூழலில் பதவியைத்தான் ஏற்காது. உத்தமசோழனை அரியணை ஏறும்படி இசைவளித்து, பதினாறு ஆண்டுகளுக்குப்பின் உத்தமசோழன் மாண்ட பின்னர் சோழப் பேராசனானார்.
இந்த வரலாற்றுச் செய்தியைக் கோவையாக நமக்கு அளித்த வரலாற்று அறிஞர்  வரலாற்றுக் களஞ்சியம் பேராசிரியர் ப. நீலகண்ட சாஸ்திரி தம்முடைய சோழர் வரலாறு எனும் ஆராய்ச்சி நூலில் ஓர் உண்மையை மறைத்துவிட்டார்.
உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்கள் பெயர்ப் பட்டியல் தெளிவாக இருக்கிறது. இராசராசசோழனுக்கு முன் அரியணையேறிய உத்தமசோழனே கொலைச் சதியில் பங்கு கொண்டவர் என்றும் கூறிச் சென்று விட்டார்.
ஆனால், உத்தம சோழனுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் பங்கு இருந்திருக்க வேண்டும் என்று கூறத்தக்க நேரடியான அல்லது மறைமுகமான ஆதாரம் ஏதுமில்லை என்பதோடு, நீலகண்ட சாஸ்திரியும் சுட்டிக் காட்டவில்லை.
உடையார்குடி கல்வெட்டு நீலகண்ட சாஸ்திரி அறியாமல் இருந்திருக்கலாம் என்று சமாதானமும் கூற முடியவில்லை. உடையார்குடிக் கல்வெட்டு யார் யார் கொலைகாரர்கள் என்று பெயரையே கூறுகிறது. அதைக் குறிப்பிடாமல் நீலகண்ட சாஸ்திரி,
சுந்தர சோழனின் கடைசி நாட்கள் இல்லத்தில் ஏற்பட்ட துன்ப நிகழ்ச்சியால் பாதிப்பிற்குள்ளாயிற்று. உடையார்குடி கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் அரசனின் ஆணையின் பேரில், பாண்டியன் முடித் தலை கொண்ட கரிகாற் சோழனின் கொலைச் சதியில் பங்கேற்றவர்களின் சிலரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கச் சொல்லி ஆணையிட்டதன் பேரில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார் என்று மட்டும் கூறுகிறார்.
Sundara Chola’s last days appear to have been eroded by a domestic trajedy. As seen from UdaiyarKudi grant dated in the II year of Raja Raja (577of 1977) Records the measures taken by the sabha of sri viranarayana saturvedi mangalam under order from the king for the confiscation and sale of the properties of some persons who were liable for the treason as they had murdered karikal chola who took the head of the Pandya.
கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள் அவர்கள் பெயர்கள் இவை என்பவையெல்லாம் குறிப்பிடாமல் சில ஆட்கள் (Some Persons) என்று மழுப்பிச் செல்கிறார் இந்தக் கற்றறிந்து வரலாற்றில் துறைபோகிய பேராசிரியர்.
ஆதித்த கரிகாலன் கொலையுண்டு, சுந்தர சோழனும் மாண்டு, பதினாறு ஆண்டுகள் உத்தம சோழனும் ஆண்டு அவனும் மாண்டு, அதன்பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் இந்த நடவடிக்கையை ராஜராஜன் மேற்கொண்டதற்குக் காரணம், வலிமைமிக்க சதிகாரர்களைத் தண்டிக்கத் தடை ஏதோ இருந்தது என்றும், அத்தடை உத்தமசோழனே என்றும் கொலைப் பழியை முழுமையாக உத்தமசோழன் மீது போடுகிறார்.
எவ்வித நேரடி ஆதாரமுமில்லாமல், அவர் அவிழ்த்துவிடும் புதிய கற்பனை வரிகள் இவை.
It seems impossibe under the circumstance to acquit Uthama Chola of a part in the consbiracy that resulted in the final murder of the heir apparent. He formed a party of his own and brought about the murder of Aditya II and having done so he forrced the hands of sundara Chola to make him his heir apparent and as there was no help for it sundara chola had to... என்றோ கொலை செய்த பார்ப்பனக் கொலையாளிகளை வரலாற்றிலிருந்து மறைத்திட மேலும், மேலும் நீலகண்ட சாஸ்திரியார் கற்பனை செய்து கொண்டே செல்கிறார் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.
ஆதித்ய கரிகாலனின் மறைவிற்குப்பின் அருள்மொழிவர்மன் (லெய்டன் பட்டயமே இராஜராஜன் என்ற பெயரைக் கூறுகிறது) குடிமக்களால் அரியணை ஏறும்படி வேண்டிக் கொள்ளப் பெற்றாலும், உத்தமசோழனே அரியணை ஏற அவா கொண்டமையால் இராஜராஜன் அவர்கள் வேண்டுகோளை ஏற்கவில்லை. இதி-லிருந்து சுந்தரசோழன் இறந்தபின் வாரிசுச் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சாஸ்திரியார் கற்பனை செய்கிறார்.
ஆனால், லெய்டன் பட்டயம் அவ்வாறெல்லாம் சிக்கல் ஏதும் குறிப்பிடாமல் மதுராந்தகன் என்ற உத்தமசோழன் ஆதித்யனின் மறைவிற்குப்பின் நேரடியாகவே பதவி ஏற்றதாகக் கூறுகிறது.
உத்தமசோழன் பதவியேற்க ஒப்புக் கொண்ட இராஜராஜன், உத்தம சோழனுக்குப்பின் தாமே பதவிக்கு வர வேண்டுமேயல்லாமல் உத்தம சோழனின் வாரிசு யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்று கூறி விட்டார் என்றும் நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.
இவ்வாறு இராஜராஜன் பதவியை உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுத்ததற்குக் காரணம் உள்நாட்டுப் போர்கள் ஏற்படாது தடுக்கவே என்றும் கூறுகிறார். இவ்வாறு தம் கற்பனையை அவிழ்த்து விடும் நீலகண்ட சாஸ்திரியார் தம் கற்பனைக் கருத்தை வலியுறுத்த சோழர்களின் காலத்துத் திருவாலங் காட்டுப் பட்டயத்தில் வடமொழியில் அமைந்து உள்ள 69 வரி வரியைச் சுட்டிக் காட்டினார்.
தென் இந்தியச் சாசனங்கள் (S11) தொகுதி மூன்றில் 205ஆம் எண் கொண்ட திருவாலங்காட்டுப் பட்டயத்தில் காணப்படும் வரிகளை ஆராய்ந்து பார்த்தால் எந்த இடத்திலும் உத்தமச் சோழன் கொலைக்குக் காரணமானவர் என்றோ அவருக்குப் பங்கிருந்தது என்றோ கூறத்தக்க சான்றுகளே இல்லை.
திருவாலங்காட்டுப் பட்டய வரிகளைக் கீழே காண்போம். அவை உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழலையோ, உத்தம சோழனுக்குப்பின் தாம்தான் அரசராக வருவோம் என்று இராஜராஜன் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக இராஜராஜனுக்கு உத்தம சோழன் இளவரசு பட்டம் கட்டிய செய்தியே காணப்படவில்லை. திருவாலங்காட்டுப் பட்டயத்திலும், லெய்டன் பட்டயத்திலும் உத்தம சோழனின் மகன் மதுராந்தக கண்டராதித்தன் என்பவன் பெயர் காணப்படவில்லை. சோழர் அரியணையில் ஏறும்படி குடிமக்கள் வேண்டிய போதிலும் வலிமையான கலியுகத்தின் கண்களைக் குருடாக்கும் இருளை ஒழித்திட, அரச நடவடிக்கையின் உண்மை நிலையை உணர்ந்த அருள்மொழி வர்மன் தனக்கு அரியணை வேண்டுமென்று தன் மனத்தால் கூடக் கருதாமல் தன் சிற்றப்பா தன் அரியணைமீது கொண்டுள்ள ஆசையைப் புரிந்து விட்டுக் கொடுத்தார்.
அவர் உடலில் காணப்படும் அடையாளங்களாகக் கொண்டு மூன்று உலகங்களையும் காப்பவரான தாமரைக் கண்ணனான திருமால் இவ்வுலகில் அவதரித்துள்ளார் அருள்மொழிவர்மன் வடிவில் என உணர்ந்து மதுராந்தகன் தமது வாரிசாக முடி சூட்டித் தாம் இவ்வுலகை ஆளும் பொறுப்புச் சுமையை ஏற்றார்.
ஆனால், உத்தமச் சோழனை நீலகண்ட சாஸ்திரி சுயநலமி என்றும், பக்தியும் நேர்மையும் நிரம்பிய தாய் தந்தையருக்கும் பிறந்த முறை பிறழ்ந்து ஆசை உடையவர் என்றும், தன்னலமே பெரிதெனக் கருதியவர் என்றும் குறை கூறுகிறார். பார்ப்பனர்களுக்குக் கொலைச் சதியில் இருக்கும் பங்கைத் திசை திருப்பவே நீலகண்ட சாஸ்திரி இம்முயற்சி மேற்கொண்டு உள்ளாரோ என்று அய்யுற வேண்டி உள்ளது.
ஏ.வி. சுப்பிரமணிய அய்யர், பண்டைய தக்காணம் எனும் நூலில் பக் 243இல், இராஜராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகையில், மதுராந்தகன் என்ற உத்தமசோழரின் மகனுக்கு மூன்று வயதாக இருக்கலாம் என்கிறார்.
பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் நீலகண்ட சாஸ்திரியாருக்கு மூன்று மறுப்புகளைக் கூறுகிறார்.
முதல் மறுப்பு:
உத்தம சோழனுக்கு அக்கொடுஞ்செயலில் தொடர்பு இருந்திருப்பின் ஆதித்த கரிகாலனின் தம்பியும், குடிகளால் அன்று பாராட்டிப் போற்றப் பெற்றவனும், பெரிய வீரனுமாகிய இராசராசசோழன் அரியணையைக் கைப்பற்றி தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தம் சோழன் பெற்று அரசாள உடன்பட்டு தான் பதுங்கிக் கொண்டிருக்க மாட்டார்.
இரண்டாம் மறுப்பு:
திருவாலங் காட்டுச் செப்பேடு இராஜராஜன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட தாம் விரும்புவதில்லை என்றுதன் குடிகளிடம் கூறினார் என்று கூறுவதிலிருந்து தன் அண்ணன் உத்தம சோழனால் கொல்லப்பட்டிருந்தால் அவர்பால் இவ்வளவு அன்பும், மதிப்பும் இராசராசர் வைத்திருக்க மாட்டார் என்பது தெளிவு என்று கூறுகிறார்.
மூன்றாம் மறுப்பு:
சாஸ்திரி கூறுவதை ஏற்க இயலாமைக்கு இன்றுமொரு கருத்து உள்ளது. உத்தமசோழன், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்திருந்தால் அல்லது அக்கொலையில் பங்கேற்றிருந்தால் குடிமக்கள் ஆதரவும் அரசியல் அலுவலர் துணையும் ஆட்சி நடத்த அவருக்குக் கிடைத்திருக்காது. உள்நாட்டில் அமைதியும் வளமும் நிரம்பியிருந்தது.
குழப்பம் ஏதுமின்றி சிறிதுமின்றி பதினாறு ஆண்டுகள் ஆட்சி அமைதி-யாக நடைபெற்றது என்பதற்குக் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.
திருவாலங்காட்டுப்பட்டயம் ஆதித்யர் தம் தலைநகரில் பாண்டிய அரசனின் தலையாகிய வெற்றித் தூணைச் சேர்த்தபின் விண்ணுலகம் காணும் அவாவில் மறைந்தார் என்று கூறுகிறார். உத்தம சோழனின் ஆட்சி உத்தமமான ஆட்சியாக அமைந்தது என்பதனை தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் 128,142,143,145,151 ஆகியன கச்சிபெட்டு, திருமலபுரம், திருவொற்றியூர், கோனேரிராசபுரம் முதலிய இடங்களில் அமைந்துள்ள ஆதி புரீசுவரர்கோவில், பிச்சாள் கோவில் முதலியவற்றிற்குத் தங்கம் வழங்கினான், முரசு, சாமரம் வழங்கினான் எனும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பனர்கள்
சோழர் காலத்திற்குமுன் வேதப் பார்ப்பனர்களுக்குக் கோவில் வழிபாட்டில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. ஏனென்றால் சென்னை அருங்காட்சிய 128ஆம் என்னுடைய சென்னைப்பட்டயம் உத்தம சோழன் கச்சிப்பேடு எனும் ஊரில் பிறப்பித்த ஆணை ஒன்றின் வாயிலாக நமக்குப் புதிய செய்தி கிடைக்கிறது.
பார்ப்பனர்களை எப்போது நியமிக்க வேண்டும் என்று உத்தம சோழன் ஆணையிடுகிறான் பாருங்கள். புனிதமான ஆலயங்களில் வழிபாடு நிகழ்ச்சிகள், முறைகளைக் கடமைகளை நன்கு உணர்ந்தவர் இந்தப் புனித ஆலயத்திற்குக் கிடைக்கவில்லையெனில், ஒரு பார்ப்பனர், வேதங்களில் நன்கு தேர்ந்தவர் மட்டும் வழிபாடு நிகழ்த்த நியமிக்கலாம் பார்ப்பனர்கள் ஆலயங்களில் எப்படி நுழைந்தார்கள் என்று எடுத்துக்காட்ட (SII.VoL III No.128 ð‚.164-_265)
(தென்னிந்தியத் தொகுதி பட்டயங்கள் தொகுதி 111, எண் 125, பக் 164 -_ 265) இனி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் பார்ப்பனர்கள்; அதனை நீலகண்ட சாஸ்திரி கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறியதற்கு உரிய ஆதாரத்தைக் காண்போம். சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டே சான்றாகும்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகிய நான்கு பார்ப்பனர்கள் கொலையைப் பஞ்சமாபாதகங்களில் ஒன்று என்று வகுத்தவர்கள்.
பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடி சோழ வீர மாதிராஜன் எனும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவர்கள். அரசாங்கப் பணியில் இருந்த பார்ப்பனர்கள் பஞ்சவன் பிரமாதிராசன் பாண்டிய நாட்டு அரசியல் அலுவலர். இவர்கள் கொலை செய்யக் காரணம் இருக்கக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?
கொலைக்குக் காரணம் அரசியல். பாண்டிநாட்டு அலுவலர் பஞ்சவன் பிரமாதிராஜன் எனும் பார்ப்பனன் தூண்டுதலால் பாண்டுநாட்டுப் பகைவர் தூண்டுதலே காரணம்.
எக்காரணம் பறறியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிக்கும் அவர்களின் உடன்பிறந்தவர் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். ஆயினும் உண்மைக் காரணம் ஏதும் தெரியவில்லை.
இனி ஒரு வினா பாக்கியுள்ளது உத்தமசோழன் ஆட்சியில் இக்கொலைகாரர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாமல், இராஜராஜன் காலத்தில் தண்டனை வழங்கப் பெற்றதே ஏன் எனும் கேள்விதான் அது.
இன்றுபோல் அன்று சதியை விரைந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இல்லாமல், கொலையாளியைக் கண்டறிவது, தண்டனை வழங்குவது ஆகியவற்றில் சில ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அதற்குள் உத்தமசோழன் ஆட்சி முடிவெய்தியிருக்கலாம். அதனால் அடுத்து வந்த இராஜராஜன் ஆட்சியில் எஞ்சியோருக்குத் தண்டனை விதிக்கும்படி நேர்ந்தவை இயல்பே.
மேலும் உத்தமசோழன் ஒருவருக்குத் தண்டனை வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும் என்று பண்டாரத்தார் வினா பொருத்தமாக எழுப்புகிறார்.
பார்ப்பனர்கள் மேலோர் உயர்ஜாதிக்காரர்கள உயர்பதவி வகித்தவர்களாயிற்றே, அவர்கள் கொலை செய்யும் அளவிற்குத் துணிச்சல் உடையவர்களாக இருப்பார்களோ என்றுகூட சிலர் கேட்கலாம்.
ஆனால் அக்கால வரலாற்றுச் சான்றுகள் பார்ப்பனர்கள் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
பார்ப்பனர்கள் ஓதல், ஓதுவித்தல் தொழிலைச் செய்து ஒதுங்கிவிடாமல் பழி பாவங்களைப் போதித்து விட்டு அவற்றைச் செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
பாண்டிய மண்டலத்தில் வாமலபட்டன் என்ற பார்ப்பான் சக்தியானவன் என்றும், பார்ப்பானால் கொலை செய்யப்பட்டான் என்பதை ஆதாரத்தோடு, இக்கட்டுரையாளர் எழுதிய பாண்டியர் ஆட்சி முறை நூலில் பக்.86-_இல் காணலாம். அய்ந்து பார்ப்பனர்களும், சில வெள்ளாளர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்திப் பார்ப்பனர்கள் சிலரைக் கொலை செய்தது. காதுகளை வெட்டியது, பார்ப்பனப் பெண்களை இழிவு செய்தது ஆகிய செய்திகளும் கல்வெட்டுகளில் உள்ளன.
கோவில் பணத்தைப் பார்ப்பன அர்ச்சகர்கள் கொள்ளையடிப்பது, நகைகளைத் திருடுவதும்கூட அந்நாளில் இருந்திருக்கிறது.
திருநாவக்குன்றமுடையராயனார் கோவில் அர்ச்சகர்கள் கோயில் பணத்தையும், நகையையும் திருடி எடுத்துச் சென்றுவிட்டனர் என்பதை ARE 1907 பகுதி 11 பத்தி 27இல் காணலாம்.
கல்கி பொன்னியின் செல்வன் என்னும் தம் நூலில் ஆதித்த கரிகாலன் கொலையை மய்யமாக வைத்து கதையைப் புனைந்தவர், ஆதித்த கரிகாலனைக் கொன்றவர் யார் என்று வினா எழுப்பினாரேயன்றி, அதைச் செய்தவர்கள் நான்கு பார்ப்பனர்கள், பாண்டியர் தூண்டுதல் காரணம் என்பதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.
எனவேதான் இன்று வாழும் 90 வயதுடைய வரலாற்றுப் பேராசிரியர் என். சுப்பிரமணியன் நம் ஆசிரியர் தமிழர் தலைவர் மதிப்பைப் பெற்ற பேராசிரியர் (அவரும் பார்ப்பனர்தான்) இவ்வாறு மறைத்ததை வரலாற்றியலும் முரணானது உண்மையைத் தலைகீழாக்கிய மாபெரும் புரட்டு முறைகேடான முடிவு என்று கூறுகிறார்.
நீலகண்டசாஸ்திரி சிறு பிழை செய்துவிட்டார் என்று கூறலாமா? சிறு பிழையா இது? உண்மை குழிதோண்டி புதைக்கப்பட அல்லவா செய்யப்பட்டுள்ளது?


Wednesday 1 December 2010

வைக்கம் வீரரின் பிறந்த நாள் விழா! - வைக்கத்தில் ஒரு வசந்த விழா!

வைக்கம் - கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர் - எர்ணாகுளத்திற்குத் தெற்கே 28 கிலோ மீட்டர் தொலை வில் கோட்டயம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர். ஊரின் மய்யத்திலே பெரிய நடுநாயகமாக அமைந்த வைக்கத்தப்பன் கோவில் - அதையொட்டி ஒரு கண்ணன் கோவில் என அமைந்த ஊர். கார்த்திகையில் மாலையிட்டுக் கருப்பு வேட்டி கட்டிச் சபரிமலை செல்வோர் எட்டிப் பார்த்துச் செல்லும் கோவில் உள்ள ஊர். வழக்கமாகக் கேரள ஆலயங்களில் நடை பெறும், குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறும் கோவில்களில் இதுவும் ஒன்று.
இவையெல்லாம் பக்தித் திருக்கூட்டத்தவர் அறிந்த - தெரிந்த செய்திகள். ஆனால், பகுத்தறிவாளர் - சமூகநீதியாளர் மறந்திடாத சிறப்புப் பெற்ற ஊர் என்பது அதைவிடச் சிறப்பு. இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்ற முதல் சமுதாயப் புரட்சிப் போர் நடைபெற்ற மண் அது. தாம் வாழும் மாநிலத்தையும் தாண்டி, அண்டை மாநிலமாம், ஆஸ்திக மாநிலமாம் பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தர் கூறிய கேரள மாநிலத்தில் - திருவாங்கூர் - கொச்சி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட அக்கிரகாரத்தின் கொடுமை, கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊரில், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் பாடுபட்ட, மறியல் செய்து இருமுறை சிறைப்பட்ட தந்தை பெரியார் போராடிய - வரலாற்றுப் பெருமை பெற்ற ஊர்.
85 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யா நடத்திய அறப்போர் - இந்தியத் துணைக் கண்டத்து வடபுலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுதான் இதன் கூடுதல் சிறப்பு.
இதன் தாக்கம்தான் மகத் என்றும் இடத்தில் பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியதற்கு அடிப்படை - இதை அம்பேத்கரே குறிப் பிட்டுள்ளார் எனும் பெருமையும் இவ்வூர் அய்யா நடத்திய போராட்டத்திற்கு உண்டு. அந்த வைக்கத்தில், நம் தந்தை அறிவுலக ஆசான் - முழுப் பகுத்தறிவுவாதி - தலைசிறந்த மனித நேயர் - மானிடப் பற்றாளர் - காந்தியார் தடுத்தும் - ராஜாஜி தடை போட்டுப் பார்த்தும் - போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலேந்திப் புறப்பட்டார். தீண்டாமைத் திமிரை அடக்க! அதுமட்டுமா? இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமூகநீதிப் போராட்டத்தில் முதன்முதலாகப் பெண்டிர் போராட்டக் குழுவில் பங்கேற்ற போராட்டம் அது. அதுவும் அந்தப் போர்க் களத்தில் அடுத்த வீட்டு - ஊரார் வீட்டுப் பெண்டிரை இறக்கி வேடிக்கை பார்க்காமல் தம் அன்பு மனைவி நாகம்மையையும், அருமைத் தங்கை கண்ணம் மையையும் போராட்டக் களத்தில் இறக்கிய போராளி அய்யா என்று வரலாறு பதிந்து வைத்துள்ளது.
அந்த மண்ணில் -
அய்யா கொள்கைக் கொடியேந்தித் தலைமையேற்றுச் சென்ற மண்ணில் நம் வாழ்வில் மறக்க முடியாத - பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்த வசந்த விழாக் காண தமிழர் தலைவர் வருக! வருக! என அழைத்திட்டார். அணி அணியாக வாருங்கள்! அழைத்து வாருங்கள்! உங்கள் ஆருயிர்த் துணைவியரை என்று அழைத்திட்டார். எதற்காக? மூன்று விழாக் கோலம் காண - விழா மாட்சியில் பங்கேற்க - தந்தை போராடிய மண்ணை மிதிக்க, காண வாருங்கள்! வாருங்கள்!! என்று அழைப்பு விடுத்தார். வழியெங்கும் நம்மை வரவேற்கும் கொடிகள், ஊரினுள் நுழையும்போது காண்பதைவிட, வைக்கம் அறப்போர் விழாவிற்கு வருகை தர விடுத்த அழைப்பு வண்ணச் சித்திர வரவேற்புகள் மலையாளத்தில் - ஆசிரியர் ஒரு பக்கம் - நம் தலைவர் தந்தை பெரியார் ஒரு பக்கம் முழுவதும் மலையாள எழுத்துக்களில் பளிச்சிடக் காண்பது ஒரு புதுமையான அனுபவம்.
ஆசிரியர் எதைச் செய்தாலும் கச்சிதமாகத் திட்ட மிட்டுச் செய்பவர் ஆதலால் வைக்கம் போராட்டத்தின் - அறப்போரின் 85 ஆம் ஆண்டு விழாவை மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அய்யாவின் 132 ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவையும், அய்யாவின் உயிர்த் தலைக் கொள்கையான ஜாதி ஒழிப்பையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார் என்பதால் இவ்விழாவி ற்குக் கூடுதல் சிறப்பு ஏற்பட்டுவிட்டது. நம் ஆசிரியர் அவர்கள் இயல்பாகவே அமைதியானவர் - ஆர்ப்பாட்டமில்லாதவர் - ஆனால், மேடையேறிப் பகுத் தறிவுக் கருத்துகளைக் கொட்டத் தொடங்கினால், குற்றால அருவியெல்லாம் இல்லை - நயகாரா அருவிகூடத் தோற்றுவிடும். ஆசிரியருடன் அவர் அழைப்பை ஏற்று, அவர் தம் துணைவியார் அம்மாவும் பார்வையாளர் மத்தியில்!
ஆனால், அவருடைய அருமைப் புதல்வர் செயல்வீரர் - வீ. அன்புராஜ் துடிப்பும், வேகமும் மிக்கவர் - அதிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செய்யும் போது இருக்கிற துடிப்பும், வேகமும் இருக்கிறதே அது அளவிட முடியாதது. மேடையில் அவரை உட்கார்ந்து பார்க்க முடியாது - ஓடியாடிக் கொண்டே செயலாற்றும் அவருடைய திறன் அங்கே பெரும் கருஞ்சட்டைப் படையை அரங்கம் நிறைந்து வழியும் வண்ணம் திரட்டிவிட்டது. அதனாலேதான் மாலையில் கவிஞர் கனிமொழி, பெரியார் திடலே இங்கே கூடிவிட்ட அற்புதக் காட்சியைக் காண் கிறேன் என்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்று மூன்று மொழிகள் மேடையில் சங்கமித்தன.
இந்தக் கூட்டத்தில் வரவேற்புரை யாற்றத் தமிழ் மண்ணிலிருந்து வந்த பரிதி இளம்வழுதி அவர்களின் உரை உணர்ச்சிப் பெருக்காய் அமைந்தது. ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவரை நடப்ப தற்குத் தடை விதித்த அந்த வீதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாம் மேடையேறிப் பேசக் கிடைத்த அந்த வாய்ப்பையும், இதன் தாக்கத்தையும், அம்பேத்கரிடம் ஏற்படுத்திய வைக்கம் நிகழ்ச்சியையும் மகத் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து சிறப்பாக எடுத்துக் கூறினார் நம் செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்கள்.
அது மட்டுமல்லாது இறுதிவரை நிகழ்ச்சியில் பங் கேற்று, பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் எழுதிய வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம் எனும் நூலையும் தமிழர் தலைவர் எழுதி மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வைக்கத்தில் தீண்டாமை ஒழித்த பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆகிய நூலையும் வெளியிட்ட சிறப்பும் நிகழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான கனிமொழி அவர்கள் நூல்களை வெளியிடச் சிறப்பாக அமைந்தது காலை நிகழ்ச்சி. அறிமுக உரையாற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன், வரவேற்புரையாற்றிய வீ. அன்புராஜ், தொடக்கவுரை ஆற்றிய அமைச்சர் பரிதி இளம்வழுதி, நன்றியுரை நவின்ற துரை. சந்திரசேகரன் ஆகியோர் உரைகள்தாம் தமிழில் கவிஞர் கலி.பூங்குன்றன் வழக்கம்போல் முத்தான தொகுப்புரை வழங்கினார், கச்சிதமாக நூல் பிடித்தாற் போன்றது.
ஆனால், சிறப்புரையாற்றியவர்கள் உரைகள் அத் தனையும் - முன்னாள் கேரள மாநிலச் சட்டமன்ற உறுப் பினர் திரு.ஏ.கே. மணியின் உரை தவிர்த்து மற்றையோர் உரைகள் மலையாள மொழியில் இருந்தபோதிலும், அன்றைய நாளில் வைக்கத்தில் சமூகநீதிக்குப் போராட்டம் நடத்திய அய்யாவின் பெருமைகளை, இன்றைய நாளில் அமைச்சர்களாக இருப்பவர், முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடுத்துக் கூறியபோது, மொழி மலையாள மான போதிலும், புரியும்படி உணர்ச்சிப் பிரவாகத்தில் ஒவ்வொருவரும் நனைவதாக அமைந்தது.
அதிலும், அவர்களில் ஒருவர் - முன்னாள் கேரள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர், இராதாகிருஷ் ணன் அவர்கள், நீங்கள் அணிந்திருப்பது கருப்புச் சட்டை - எங்கள் தோலின் நிறமே கருப்புத் தான் என்ற போது அரங்கமே அதிர்ந் தது கைதட்டலில். மலையாளம் புரிந் தது அனைவருக்கும். மாலையில் ஆசிரியரின் ஒரு மணிநேரச் சொற்பொழிவும் சரி, கவிஞர் கனிமொழியின் சொற்பொழி வும் சரி, மறக்க இயலா நினைவு களின் அழிக்க இயலாப் பதிவுகள். ஒரே நாளில் முடிந்த முக்கனி விழா வான போதிலும், அதன் சுவையும், பாதிப்பும் பங்கேற்ற ஒவ்வொரு இதயத் திலும் இன்பப் பாதிப்பை என்றும் ஏற்படுத்தும் வகையில் உண்மையா கவே மறக்க முடியாதவை. பங்கேற்ற அத்தனை பேரும் கொடுத்து வைத் தவர்கள்தாம்.
35 ஆண்டுகளுக்குமுன் முப்பது வயது இளைஞனாகச் சுயமரியாதை இயக்கம்பற்றி எம்.லிட், பட்ட ஆய்வு மேற்கொண்ட போது ஒரே முறை வைக்கத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்தபோது இத்தகைய உணர்வுகள் ஏற்படவில்லை. ஆராய்ச்சி - வைக்கம் போராட்டம் - சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணங்களில் ஒன்று - திரு.வி.க.வினால் தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் பட்டம் பெற்றுத் தந்தது. கோவை அய்யா முத்து பங் கேற்றார், அன்னை நாகம்மையார், அய்யாவின் சகோதரி கண்ணம்மையார் பங்கேற்றனர். காந்தியும், ராஜாஜியும் சமாதானம் செய்ய முயன்றனர் என்ற தகவல்களின் தொகுப்பே அன்று என்னிடத்தில் முன்னின்றன.
ஆனால், இன்று இந்நாளில் ஏற்பட்ட சமூக மாற்றம், தாழ்த்தப்பட்டவர் முன்னேறத் திராவிட இயக்கத்தின் முஸ்தீபு, இன்று ஆலயத்தில் அர்ச்சகராகச் சட்டம் இயற்றப்பட்டும், இன்னும் கைகூடாத பின்னணியில் வைக்கத்தைப் பார்க்கையில் அது ஒரு மாபெரும் வரலாற்றுச் சின்னம் - சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட வேண்டிய - எதிர்காலச் சந்ததி சென்று காணவேண்டிய மண் எனும் உணர்வு மிகுந்தது. அதற்கேற்ப தீர்மானமும் அங்கே நிறைவேறியது மனதுக்கு இதமாக இருந்தது.
வைக்கம் அறப்போர் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மகிழ்ச்சிப் பிரவாகம் தொண்டர்களிடத் திலே - அய்யா அன்பர்களிடத்திலே ஊற்றாகப் பெருகியது போல தமிழர் தலைவரிடத்தும் பெருகியதுதான் சிறப்பு. எப்படி? யாருக்கும் கிடைக்காத அந்த வாய்ப்பு நம் ஆசிரியர், தமிழர் தலைவர் அவர்களுக்கு இந்த முறைதான் கிட்டி யிருக்கிறது. இதற்கு முன் அம்மாவுடன் ஒரு முறை, 1994 இல் ஒரு முறை என்று வைக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பங்கேற்றபோது கிடைக்காத அனுபவம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து போகிறார் தமிழர் தலைவர். முப்பெரும் விழா நடைபெற்ற மறுநாள் ஆலப்புழையில் இருந்து அய்யா ஆற்றில் பயணித்துப் படகில் வைக்கம் வந்தது போலப் படகுப் பயணம், அவர் வந்து இறங்கிய படகுத்துறை ஆகியவைகளைப் பார்த்த அனுபவம் கிட்டி யிருக்கிறது. அது மட்டுமா? போராட்டம் தொடங்கும் முன், அய்யாவும் தொண்டர் களும் தங்கி யிருந்த இடம் இப்போது எஸ்.என்.டி.பி. வைக்கம் நினைவு உயர்நிலைப் பள்ளி யாக மாறியுள்ளது. அந்த உயர்நிலைப் பள்ளியில் இந்தப் பகுதி மட்டும் அப்படியே இருக்கிறது. பின்புறம் மற்றபடி பள்ளிக் கட்டடம் விரிவாக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் அப்பள்ளித் தலைமை ஆசிரி யர், மாணவ மாணவிகள் ஆசிரியரை வரவேற்று வைக்கம் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதன் பயனாக ஆசிரியர் அந்தப் பள்ளியில் தந்தை பெரியார் நினைவைப் போற்றும் அற்புத ஏற்பாடு ஒன்றினையும் செய் திருக்கிறார். அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் அப்பள்ளியில் வைக்கம் அறப்போர் நாளை முன்னிட்டு- மாண வர்களுக்குக் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி முதலியன நடத்திடவும், அதற்கு நாராயணகுரு - தந்தை பெரியார் பெயரிட்டு நடத்தவும் ஓர் ஏற்பாட்டைச் செய்து வந்திருக்கிறார். இதற்கான பெரியார் பற்றிய நூல்கள், படங்கள் வழங்கவும் தக்க ஏற்பாட்டையும் கையோடு செய்து விட்டு நிறைவுடன் வந்த தமிழர் தலைவர் அடுத்துச் சென்றது போராட்டத்தின் போது அய்யா கைது செய்யப்பட்ட காவல் நிலையம். அந்தக் காவல் நிலையம் 200 ஆண்டுக் கால பழமை வாய்ந்தது. அந்தக் காவல்நிலையம் பழம் பெருமை மாறாமல் இன்றும் காணப்படுகிறது. காவல் நிலையத்திற்குச் சென்ற தமிழர் தலைவருக்குக் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவலர்கள், மகளிர் காவலர்கள் வணக்கம் தெரிவித்து சமூகப் போராளி, சமூகப் புரட்சியாளர் இருத்தி வைக்கப் பட்டிருந்த சிறை, அந்தத் துருப்பிடித்த கம்பிகளுடன் அப்படியே இருப்பதைப் பார்த்தபோது அப்படியேஅய்யா அங்கே அந்தச் சிறைக் கம்பி களைப் பற்றியவாறு நின்ற அனுபவங்களில் மூழ்கிப்போனார்.
அந்த அறை இப்போது சிறைக் கூடமாக இல்லாது காவலர்கள் தங்கும், உடை மாற்றும் அறையாக இருந்த போதிலும், அந்தச் சிறையினுள் நின்று அந்தக் கம்பிகளைப் பார்த்த தலைவர், அய்யா இருந்த சிறையைக் கண்டதோடு நின்றுவிடவில்லை; அந்தக் கம்பிகளுக்கு உள்ளே நின்று ஒரு புதிய அனுபவம் பெற்றார். இதற்கு முன் நெருக்கடி நிலையின் போதும், பல சமூக நீதிப் போராட்டங்களின் போதும் சிறைப் பட்டுத் துன்பம், வேதனை அனுபவித்த தமிழர் தலைவருக்கு வைக்கம் அறப் போரின் போது அய்யா அடைத்து வைக்கப்பட்ட அந்தச் சிறை, அந்தக் கம்பிகளைப் பற்றிய போது ஏற்பட்ட உணர்ச்சிமயமான அந்த அனுபவங்களை நம்மால் மட்டுமல்ல, அவராலும் கூட வார்த்தைகளில் வடிக்க முடியாது.
வைக்கம் ஒரு சிற்றூர் அல்ல - சமூகப் புரட்சியாளர் - சமூக சீர்திருத்த ஆர்வலர் சென்று காணவேண்டிய திருத்தலம்!
அதனாலேதான் தமிழர் தலைவர் அய்யா இருந்த அந்த 200 ஆண்டுப் பழமை வாய்ந்த அச்சிறைச்சாலையை நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாக்க கேரள அரசுக்கு வேண்டு கோள் விடவும், அதற்கு உறு துணையாகத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து ஆவன செய்யவும் முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்.
வைக்கம் கேரளத்தில் இருந்தாலும், உலகத் தலைவர் பெரியார் - சமூக நீதிப் போராளி என்பதற்கு வாழும் சின்னம்.
                                              நன்றி:விடுதலை(01-12-2010)