Wednesday 1 December 2010

வைக்கம் வீரரின் பிறந்த நாள் விழா! - வைக்கத்தில் ஒரு வசந்த விழா!

வைக்கம் - கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர் - எர்ணாகுளத்திற்குத் தெற்கே 28 கிலோ மீட்டர் தொலை வில் கோட்டயம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர். ஊரின் மய்யத்திலே பெரிய நடுநாயகமாக அமைந்த வைக்கத்தப்பன் கோவில் - அதையொட்டி ஒரு கண்ணன் கோவில் என அமைந்த ஊர். கார்த்திகையில் மாலையிட்டுக் கருப்பு வேட்டி கட்டிச் சபரிமலை செல்வோர் எட்டிப் பார்த்துச் செல்லும் கோவில் உள்ள ஊர். வழக்கமாகக் கேரள ஆலயங்களில் நடை பெறும், குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறும் கோவில்களில் இதுவும் ஒன்று.
இவையெல்லாம் பக்தித் திருக்கூட்டத்தவர் அறிந்த - தெரிந்த செய்திகள். ஆனால், பகுத்தறிவாளர் - சமூகநீதியாளர் மறந்திடாத சிறப்புப் பெற்ற ஊர் என்பது அதைவிடச் சிறப்பு. இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்ற முதல் சமுதாயப் புரட்சிப் போர் நடைபெற்ற மண் அது. தாம் வாழும் மாநிலத்தையும் தாண்டி, அண்டை மாநிலமாம், ஆஸ்திக மாநிலமாம் பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தர் கூறிய கேரள மாநிலத்தில் - திருவாங்கூர் - கொச்சி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட அக்கிரகாரத்தின் கொடுமை, கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊரில், தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் பாடுபட்ட, மறியல் செய்து இருமுறை சிறைப்பட்ட தந்தை பெரியார் போராடிய - வரலாற்றுப் பெருமை பெற்ற ஊர்.
85 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யா நடத்திய அறப்போர் - இந்தியத் துணைக் கண்டத்து வடபுலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுதான் இதன் கூடுதல் சிறப்பு.
இதன் தாக்கம்தான் மகத் என்றும் இடத்தில் பொதுக் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியதற்கு அடிப்படை - இதை அம்பேத்கரே குறிப் பிட்டுள்ளார் எனும் பெருமையும் இவ்வூர் அய்யா நடத்திய போராட்டத்திற்கு உண்டு. அந்த வைக்கத்தில், நம் தந்தை அறிவுலக ஆசான் - முழுப் பகுத்தறிவுவாதி - தலைசிறந்த மனித நேயர் - மானிடப் பற்றாளர் - காந்தியார் தடுத்தும் - ராஜாஜி தடை போட்டுப் பார்த்தும் - போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலேந்திப் புறப்பட்டார். தீண்டாமைத் திமிரை அடக்க! அதுமட்டுமா? இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமூகநீதிப் போராட்டத்தில் முதன்முதலாகப் பெண்டிர் போராட்டக் குழுவில் பங்கேற்ற போராட்டம் அது. அதுவும் அந்தப் போர்க் களத்தில் அடுத்த வீட்டு - ஊரார் வீட்டுப் பெண்டிரை இறக்கி வேடிக்கை பார்க்காமல் தம் அன்பு மனைவி நாகம்மையையும், அருமைத் தங்கை கண்ணம் மையையும் போராட்டக் களத்தில் இறக்கிய போராளி அய்யா என்று வரலாறு பதிந்து வைத்துள்ளது.
அந்த மண்ணில் -
அய்யா கொள்கைக் கொடியேந்தித் தலைமையேற்றுச் சென்ற மண்ணில் நம் வாழ்வில் மறக்க முடியாத - பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்த வசந்த விழாக் காண தமிழர் தலைவர் வருக! வருக! என அழைத்திட்டார். அணி அணியாக வாருங்கள்! அழைத்து வாருங்கள்! உங்கள் ஆருயிர்த் துணைவியரை என்று அழைத்திட்டார். எதற்காக? மூன்று விழாக் கோலம் காண - விழா மாட்சியில் பங்கேற்க - தந்தை போராடிய மண்ணை மிதிக்க, காண வாருங்கள்! வாருங்கள்!! என்று அழைப்பு விடுத்தார். வழியெங்கும் நம்மை வரவேற்கும் கொடிகள், ஊரினுள் நுழையும்போது காண்பதைவிட, வைக்கம் அறப்போர் விழாவிற்கு வருகை தர விடுத்த அழைப்பு வண்ணச் சித்திர வரவேற்புகள் மலையாளத்தில் - ஆசிரியர் ஒரு பக்கம் - நம் தலைவர் தந்தை பெரியார் ஒரு பக்கம் முழுவதும் மலையாள எழுத்துக்களில் பளிச்சிடக் காண்பது ஒரு புதுமையான அனுபவம்.
ஆசிரியர் எதைச் செய்தாலும் கச்சிதமாகத் திட்ட மிட்டுச் செய்பவர் ஆதலால் வைக்கம் போராட்டத்தின் - அறப்போரின் 85 ஆம் ஆண்டு விழாவை மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அய்யாவின் 132 ஆம் ஆண்டுப் பிறந்த நாள் விழாவையும், அய்யாவின் உயிர்த் தலைக் கொள்கையான ஜாதி ஒழிப்பையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார் என்பதால் இவ்விழாவி ற்குக் கூடுதல் சிறப்பு ஏற்பட்டுவிட்டது. நம் ஆசிரியர் அவர்கள் இயல்பாகவே அமைதியானவர் - ஆர்ப்பாட்டமில்லாதவர் - ஆனால், மேடையேறிப் பகுத் தறிவுக் கருத்துகளைக் கொட்டத் தொடங்கினால், குற்றால அருவியெல்லாம் இல்லை - நயகாரா அருவிகூடத் தோற்றுவிடும். ஆசிரியருடன் அவர் அழைப்பை ஏற்று, அவர் தம் துணைவியார் அம்மாவும் பார்வையாளர் மத்தியில்!
ஆனால், அவருடைய அருமைப் புதல்வர் செயல்வீரர் - வீ. அன்புராஜ் துடிப்பும், வேகமும் மிக்கவர் - அதிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செய்யும் போது இருக்கிற துடிப்பும், வேகமும் இருக்கிறதே அது அளவிட முடியாதது. மேடையில் அவரை உட்கார்ந்து பார்க்க முடியாது - ஓடியாடிக் கொண்டே செயலாற்றும் அவருடைய திறன் அங்கே பெரும் கருஞ்சட்டைப் படையை அரங்கம் நிறைந்து வழியும் வண்ணம் திரட்டிவிட்டது. அதனாலேதான் மாலையில் கவிஞர் கனிமொழி, பெரியார் திடலே இங்கே கூடிவிட்ட அற்புதக் காட்சியைக் காண் கிறேன் என்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்று மூன்று மொழிகள் மேடையில் சங்கமித்தன.
இந்தக் கூட்டத்தில் வரவேற்புரை யாற்றத் தமிழ் மண்ணிலிருந்து வந்த பரிதி இளம்வழுதி அவர்களின் உரை உணர்ச்சிப் பெருக்காய் அமைந்தது. ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவரை நடப்ப தற்குத் தடை விதித்த அந்த வீதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாம் மேடையேறிப் பேசக் கிடைத்த அந்த வாய்ப்பையும், இதன் தாக்கத்தையும், அம்பேத்கரிடம் ஏற்படுத்திய வைக்கம் நிகழ்ச்சியையும் மகத் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து சிறப்பாக எடுத்துக் கூறினார் நம் செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி அவர்கள்.
அது மட்டுமல்லாது இறுதிவரை நிகழ்ச்சியில் பங் கேற்று, பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் எழுதிய வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம் எனும் நூலையும் தமிழர் தலைவர் எழுதி மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வைக்கத்தில் தீண்டாமை ஒழித்த பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆகிய நூலையும் வெளியிட்ட சிறப்பும் நிகழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான கனிமொழி அவர்கள் நூல்களை வெளியிடச் சிறப்பாக அமைந்தது காலை நிகழ்ச்சி. அறிமுக உரையாற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன், வரவேற்புரையாற்றிய வீ. அன்புராஜ், தொடக்கவுரை ஆற்றிய அமைச்சர் பரிதி இளம்வழுதி, நன்றியுரை நவின்ற துரை. சந்திரசேகரன் ஆகியோர் உரைகள்தாம் தமிழில் கவிஞர் கலி.பூங்குன்றன் வழக்கம்போல் முத்தான தொகுப்புரை வழங்கினார், கச்சிதமாக நூல் பிடித்தாற் போன்றது.
ஆனால், சிறப்புரையாற்றியவர்கள் உரைகள் அத் தனையும் - முன்னாள் கேரள மாநிலச் சட்டமன்ற உறுப் பினர் திரு.ஏ.கே. மணியின் உரை தவிர்த்து மற்றையோர் உரைகள் மலையாள மொழியில் இருந்தபோதிலும், அன்றைய நாளில் வைக்கத்தில் சமூகநீதிக்குப் போராட்டம் நடத்திய அய்யாவின் பெருமைகளை, இன்றைய நாளில் அமைச்சர்களாக இருப்பவர், முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எடுத்துக் கூறியபோது, மொழி மலையாள மான போதிலும், புரியும்படி உணர்ச்சிப் பிரவாகத்தில் ஒவ்வொருவரும் நனைவதாக அமைந்தது.
அதிலும், அவர்களில் ஒருவர் - முன்னாள் கேரள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர், இராதாகிருஷ் ணன் அவர்கள், நீங்கள் அணிந்திருப்பது கருப்புச் சட்டை - எங்கள் தோலின் நிறமே கருப்புத் தான் என்ற போது அரங்கமே அதிர்ந் தது கைதட்டலில். மலையாளம் புரிந் தது அனைவருக்கும். மாலையில் ஆசிரியரின் ஒரு மணிநேரச் சொற்பொழிவும் சரி, கவிஞர் கனிமொழியின் சொற்பொழி வும் சரி, மறக்க இயலா நினைவு களின் அழிக்க இயலாப் பதிவுகள். ஒரே நாளில் முடிந்த முக்கனி விழா வான போதிலும், அதன் சுவையும், பாதிப்பும் பங்கேற்ற ஒவ்வொரு இதயத் திலும் இன்பப் பாதிப்பை என்றும் ஏற்படுத்தும் வகையில் உண்மையா கவே மறக்க முடியாதவை. பங்கேற்ற அத்தனை பேரும் கொடுத்து வைத் தவர்கள்தாம்.
35 ஆண்டுகளுக்குமுன் முப்பது வயது இளைஞனாகச் சுயமரியாதை இயக்கம்பற்றி எம்.லிட், பட்ட ஆய்வு மேற்கொண்ட போது ஒரே முறை வைக்கத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்தபோது இத்தகைய உணர்வுகள் ஏற்படவில்லை. ஆராய்ச்சி - வைக்கம் போராட்டம் - சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணங்களில் ஒன்று - திரு.வி.க.வினால் தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் பட்டம் பெற்றுத் தந்தது. கோவை அய்யா முத்து பங் கேற்றார், அன்னை நாகம்மையார், அய்யாவின் சகோதரி கண்ணம்மையார் பங்கேற்றனர். காந்தியும், ராஜாஜியும் சமாதானம் செய்ய முயன்றனர் என்ற தகவல்களின் தொகுப்பே அன்று என்னிடத்தில் முன்னின்றன.
ஆனால், இன்று இந்நாளில் ஏற்பட்ட சமூக மாற்றம், தாழ்த்தப்பட்டவர் முன்னேறத் திராவிட இயக்கத்தின் முஸ்தீபு, இன்று ஆலயத்தில் அர்ச்சகராகச் சட்டம் இயற்றப்பட்டும், இன்னும் கைகூடாத பின்னணியில் வைக்கத்தைப் பார்க்கையில் அது ஒரு மாபெரும் வரலாற்றுச் சின்னம் - சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட வேண்டிய - எதிர்காலச் சந்ததி சென்று காணவேண்டிய மண் எனும் உணர்வு மிகுந்தது. அதற்கேற்ப தீர்மானமும் அங்கே நிறைவேறியது மனதுக்கு இதமாக இருந்தது.
வைக்கம் அறப்போர் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மகிழ்ச்சிப் பிரவாகம் தொண்டர்களிடத் திலே - அய்யா அன்பர்களிடத்திலே ஊற்றாகப் பெருகியது போல தமிழர் தலைவரிடத்தும் பெருகியதுதான் சிறப்பு. எப்படி? யாருக்கும் கிடைக்காத அந்த வாய்ப்பு நம் ஆசிரியர், தமிழர் தலைவர் அவர்களுக்கு இந்த முறைதான் கிட்டி யிருக்கிறது. இதற்கு முன் அம்மாவுடன் ஒரு முறை, 1994 இல் ஒரு முறை என்று வைக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் பங்கேற்றபோது கிடைக்காத அனுபவம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து போகிறார் தமிழர் தலைவர். முப்பெரும் விழா நடைபெற்ற மறுநாள் ஆலப்புழையில் இருந்து அய்யா ஆற்றில் பயணித்துப் படகில் வைக்கம் வந்தது போலப் படகுப் பயணம், அவர் வந்து இறங்கிய படகுத்துறை ஆகியவைகளைப் பார்த்த அனுபவம் கிட்டி யிருக்கிறது. அது மட்டுமா? போராட்டம் தொடங்கும் முன், அய்யாவும் தொண்டர் களும் தங்கி யிருந்த இடம் இப்போது எஸ்.என்.டி.பி. வைக்கம் நினைவு உயர்நிலைப் பள்ளி யாக மாறியுள்ளது. அந்த உயர்நிலைப் பள்ளியில் இந்தப் பகுதி மட்டும் அப்படியே இருக்கிறது. பின்புறம் மற்றபடி பள்ளிக் கட்டடம் விரிவாக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் அப்பள்ளித் தலைமை ஆசிரி யர், மாணவ மாணவிகள் ஆசிரியரை வரவேற்று வைக்கம் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதன் பயனாக ஆசிரியர் அந்தப் பள்ளியில் தந்தை பெரியார் நினைவைப் போற்றும் அற்புத ஏற்பாடு ஒன்றினையும் செய் திருக்கிறார். அடுத்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் அப்பள்ளியில் வைக்கம் அறப்போர் நாளை முன்னிட்டு- மாண வர்களுக்குக் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி முதலியன நடத்திடவும், அதற்கு நாராயணகுரு - தந்தை பெரியார் பெயரிட்டு நடத்தவும் ஓர் ஏற்பாட்டைச் செய்து வந்திருக்கிறார். இதற்கான பெரியார் பற்றிய நூல்கள், படங்கள் வழங்கவும் தக்க ஏற்பாட்டையும் கையோடு செய்து விட்டு நிறைவுடன் வந்த தமிழர் தலைவர் அடுத்துச் சென்றது போராட்டத்தின் போது அய்யா கைது செய்யப்பட்ட காவல் நிலையம். அந்தக் காவல் நிலையம் 200 ஆண்டுக் கால பழமை வாய்ந்தது. அந்தக் காவல்நிலையம் பழம் பெருமை மாறாமல் இன்றும் காணப்படுகிறது. காவல் நிலையத்திற்குச் சென்ற தமிழர் தலைவருக்குக் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவலர்கள், மகளிர் காவலர்கள் வணக்கம் தெரிவித்து சமூகப் போராளி, சமூகப் புரட்சியாளர் இருத்தி வைக்கப் பட்டிருந்த சிறை, அந்தத் துருப்பிடித்த கம்பிகளுடன் அப்படியே இருப்பதைப் பார்த்தபோது அப்படியேஅய்யா அங்கே அந்தச் சிறைக் கம்பி களைப் பற்றியவாறு நின்ற அனுபவங்களில் மூழ்கிப்போனார்.
அந்த அறை இப்போது சிறைக் கூடமாக இல்லாது காவலர்கள் தங்கும், உடை மாற்றும் அறையாக இருந்த போதிலும், அந்தச் சிறையினுள் நின்று அந்தக் கம்பிகளைப் பார்த்த தலைவர், அய்யா இருந்த சிறையைக் கண்டதோடு நின்றுவிடவில்லை; அந்தக் கம்பிகளுக்கு உள்ளே நின்று ஒரு புதிய அனுபவம் பெற்றார். இதற்கு முன் நெருக்கடி நிலையின் போதும், பல சமூக நீதிப் போராட்டங்களின் போதும் சிறைப் பட்டுத் துன்பம், வேதனை அனுபவித்த தமிழர் தலைவருக்கு வைக்கம் அறப் போரின் போது அய்யா அடைத்து வைக்கப்பட்ட அந்தச் சிறை, அந்தக் கம்பிகளைப் பற்றிய போது ஏற்பட்ட உணர்ச்சிமயமான அந்த அனுபவங்களை நம்மால் மட்டுமல்ல, அவராலும் கூட வார்த்தைகளில் வடிக்க முடியாது.
வைக்கம் ஒரு சிற்றூர் அல்ல - சமூகப் புரட்சியாளர் - சமூக சீர்திருத்த ஆர்வலர் சென்று காணவேண்டிய திருத்தலம்!
அதனாலேதான் தமிழர் தலைவர் அய்யா இருந்த அந்த 200 ஆண்டுப் பழமை வாய்ந்த அச்சிறைச்சாலையை நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாக்க கேரள அரசுக்கு வேண்டு கோள் விடவும், அதற்கு உறு துணையாகத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து ஆவன செய்யவும் முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்.
வைக்கம் கேரளத்தில் இருந்தாலும், உலகத் தலைவர் பெரியார் - சமூக நீதிப் போராளி என்பதற்கு வாழும் சின்னம்.
                                              நன்றி:விடுதலை(01-12-2010)

No comments:

Post a Comment